நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞம், ஐடி ஊழியருமான கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர், தனது சசோதரியை காதலித்ததால் கவினை வெட்டி கொலை செய்ததாக கூறினார்.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுர்ஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும், கவினின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அரசின் இழப்பீடை வாங்க மறுத்த கவினின் உறவினர்கள், பெண்ணின் பெற்றோரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெண்ணின் தந்தையும், உதவி ஆய்வாளருமான சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உதவி ஆய்வாளர் சரவணனை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.