குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் சாவியை பணயம் வைத்து, தனது தேவைகளை நிறைவேற்ற கொண்ட குரங்கின் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மழைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். குற்றாலத்தில் சுற்றித்திரியும் குரங்குகள், சுற்றுலா பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அருவியில் குளித்த கொண்டிருந்த ஒருவரது கார் சாவியை குரங்கு ஒன்று எடுத்து சென்றுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், காவலர் பாலமுருகன் என்பவர் குரங்கிடம் இருந்து சாவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பாறையின் உயரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கிடம் அண்ணாச்சி பழத்தை கொடுத்து சாவியை மீட்க முயன்ற காவலருக்கு தோல்வியே கிடைத்தது. கார் சாவியை கால்விரலில் மாட்டிக்கொண்டு அண்ணாச்சிப்பழத்தை சாப்பிட்ட குரங்கிற்கு, வடை உள்ளிட்ட பொருட்களை காவலர் கொடுத்துள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொய்யாப் பழத்தை வாங்கிக் கொண்டு குரங்கு சாவியை கீழே போட்டது. பாறையில் விழுந்த கார் சாவியை சுற்றுலா பயணி எடுத்து சென்றார்.