சிவகங்கையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறிய புகை அங்குள்ள குடியிருப்பு வாசிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியது.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் நேற்று தீ வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் தீ மளமளவெனப் பற்றி எரிந்ததால் கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளதால், அதனை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.