சார்க் அமைப்புக்கு மாற்றாக, ஒரு புதிய அமைப்பை உருவாக்கச் சீனாவும் பாகிஸ்தானும் திட்டமிட்டு வரும் நிலையில், இந்த அமைப்பில் சேரவில்லை என்று வங்கதேசம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.
சார்க்- தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு ஆகும். இதன் தலைமைச் செயலகம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ளது.1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய 7 நாடுகள் உள்ளன. 2007-ல் ஆப்கானிஸ்தானும் இந்த சார்க் அமைப்பில் இணைந்தது.
உறுப்பு நாடுகளிடையே பிராந்திய நல்லிணக்கத்தையும் பொருளாதார ஒருங்கிணைப்பையும் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. சார்க்ன் அமைப்பின் மிகப்பெரிய உறுப்பினரான இந்தியா, கணிசமான நிதியை வழங்குவதன் மூலமும், உறுப்பு நாடுகளிடையே கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சார்க் மேம்பாட்டு நிதி மற்றும் புது தில்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகம் போன்ற முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இப்படி சார்க் உறுப்பு நாடுகளின் முன்னேற்றத்துக்கு இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் தடுத்து வந்தது. குறிப்பாக, வர்த்தக நெறிமுறைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகள் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வீட்டோவைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது.
2014 ஆம் ஆண்டு, காத்மாண்டுவில் நடந்த சார்க் உச்சி மாநாட்டின் போது, சார்க் மோட்டார் வாகன ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிராகரித்தது. உறுப்பு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் எல்லை தாண்டிய இயக்கத்திற்கான முன்மொழியப்பட்ட கட்டமைப்பை அது தடுத்தது. பாகிஸ்தானின் இந்த தடையின் காரணமாக, 2015ம் ஆண்டில் வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் ஆகிய நாடுகள் (BBIN) மோட்டார் வாகன ஒப்பந்தத்தை இறுதி செய்தன.
2017ம் ஆண்டில் பூட்டான் இதிலிருந்து விலகியதால் வங்கதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் (BBIN) மோட்டார் வாகன ஒப்பந்தம் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கிடையில், இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பேரிடர் மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொண்டன.
2016ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், 19வது சார்க் உச்சி மாநாட்டைப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 17 இந்திய இராணுவ வீரர்கள் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பங்கேற்க வில்லை.
இந்தியாவின் முடிவை ஆதரித்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணித்தன. அதனால், பாகிஸ்தானில் நடக்க இருந்த உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை எந்த உச்சிமாநாடும் நடத்தப்படவில்லை.
கொரொனா தொற்றுநோய் பரவிய கோவிட் காலத்தில், உறுப்பு நாடுகளை ஒன்றிணைக்க, 2020 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக சார்க் உச்சிமாநாட்டைநடத்தினார்.
அப்போது, கோவிட் அவசர நிதியைக் கட்டமைக்கப் பரிந்துரைத்த பிரதமர் மோடி, முதல் நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கும் என்றும் உறுதியளித்தார். இந்நிலையில், சார்க் அமைப்புக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கப் பாகிஸ்தானும், சீனாவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புதிய அமைப்பில் இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கெனவே, பாகிஸ்தான்- வங்கதேசம் இடையேயான உறவில் நெருக்கம் அதிகரித்துள்ளது.1971ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்ற பிறகு இரு நாடுகளும் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட்டதே இல்லை. கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசி கொள்முதல் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையெழுத்திட்டது.மேலும் பாகிஸ்தானுடன் இணைந்து போர்ப் பயிற்சியிலும் வங்கதேசம்
ஈடுபட்டது.
கடந்த ஜூன் 19ம் தேதி, சீனா-தெற்காசிய கண்காட்சி மற்றும் சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தின் ஒரு பகுதியாக வங்கதேசம், சீனா மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் ஒரு முறைசாரா முத்தரப்பு சந்திப்பை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம் தேதி, கோலாலம்பூரில் நடந்த ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டத்தின் போதும், வங்கதேசத்தின் வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹொசைனை, இந்த புதிய அமைப்பில் சேர, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
சீனாவின் யோசனைகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட வங்கதேச வெளியுறவு ஆலோசகர்,எதுவும் கூறாமல், புன்னகைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், சீனா புதிய அமைப்பு பற்றிய முத்தரப்பு முயற்சியை எழுப்பியதை உறுதிப்படுத்திய ஹொசைன், வங்கதேசம் அத்தகைய முத்தரப்பு முயற்சியில் சேராது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஐந்து முறையாவது, வங்கதேசத்துடன் முத்தரப்பு முயற்சியைச் சீனா முன்னெடுத்திருக்கும் நிலையில், புதிதாக எந்த அரசியல் கூட்டணியிலும் இடம்பெறவில்லை என்றும், இது அரசு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு மட்டுமே, அரசியல் நடவடிக்கை அல்ல என்றும் வங்கதேசம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
தீவிரமான கொள்கை முடிவுகளை எடுப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வேலை என்பதால் இடைக்கால அரசு, இப்போதைக்குச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எந்த புதிய கூட்டணியிலும் சேரவில்லை என வங்கதேசம் அறிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நேபாளம் மற்றும் இலங்கையை இந்த புதிய அமைப்பில் சீனாவும், பாகிஸ்தானும் சேர்க்கவில்லை. இந்த இரண்டு தெற்காசிய நாடுகளையும் அழைக்க திட்டமிட்டுள்ளதா என்பதையும் சீனா இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.
சீனா-பாகிஸ்தான்-வங்கதேசம் என அண்டை நாடுகள் ஒரே புள்ளிக்கு வருவது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்காகவே புதிய முக்கோணத்தைச் சீனாவும் பாகிஸ்தானும் உருவாக்கத் திட்டமிடுகிறது. தனது மாயவலையில் சிக்கிய பாகிஸ்தானைப் போல வங்கதேசத்தையும், தன் மாயவலையில் சிக்கவைக்கச் சீனா தளராமல் முயற்சி செய்து வருகிறது.
ஆனால், வங்கதேசம் சீனாவின் அழுத்தம் மற்றும் செல்வாக்குக்குப் பணியாமல், விலகி இருக்கிறது. இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்தியாவுக்கு எதிராகச் செல்ல வங்கதேசம் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.