காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செங்காடு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மனைவி ராஜம் என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் – சரிதா தம்பதியர், 14 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து ராஜத்தை கொலை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜம் அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான சரிதாவிற்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2-வது குற்றவாளியான பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
3-வது குற்றவாளியான 14 வயது இளஞ்சிறார் குறித்த நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.