தமிழக காவல்துறை தலைவரின் பதவி காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் புதிய தலைவர் தேர்வை உடனடியாக தொடங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைவர் பதவி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்றும், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அலுவலர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு இதுவரை தமிழக அரசு அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
2026ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தங்களுக்கு சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும், தற்போதைய டிஜிபியின் ஓய்வுக்கு பின் பொறுப்பு காவல்துறை தலைவரை நியமிக்கவோ, சங்கர் ஜிவாலின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவோ கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.