திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின்போது மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி, தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 12 பள்ளிகள் கலந்து கொண்ட நிலையில், இறுதிப் போட்டியில் முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலை பள்ளிக்கும், புனித மரியன்னை மேல்நிலை பள்ளிக்கும் இடையே நடைபெற்றது.
அப்போது புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியின் கோல் கீப்பர் மீது, கல்லூரி மாணவர்கள் கல்லை வீசி இடையூறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதால், கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும், எதிர்தரப்பு மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர்களின் பெற்றோர் திண்டுக்கல்-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் போராட்டமானது கைவிடப்பட்டது.