தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை ஐடி ஊழியர் கவின் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர், கொலை சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆட்சியர் சுகுமார், மாநகர காவல்துறை ஆணையர்கள் விஜயகுமார், வினோத் சாந்தராம் உள்ளிட்டோர் வழக்கு குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்வாணன், தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
ஆணவக் கொலை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனக் கூறிய அவர், தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஆணையத்தின் விருப்பமெனத் தெரிவித்தார்.