அயர்லாந்து நாட்டில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கத் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ளது டல்லாட் என்ற அந்த பகுதி. அங்குள்ள சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவர் ஒரு இந்தியர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்துப் பேச தொடங்கியது.
வம்பிழுப்பதுதான் அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது. சம்மந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்ட அந்த கும்பல், ஒரு கட்டத்தில் அந்த இந்தியரைத் தாக்கத் தொடங்கியது. எல்லை மீறிச் சென்று அவரது ஆடைகளையும் களைந்து, தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட பொதுமக்கள், உடனே ஓடிச்சென்று அந்த கும்பலைத் தடுத்து நிறுத்தினர். மேலும், காயமடைந்த இந்தியரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் நடந்தது கடந்த மாதம் 19ம் தேதி. பாதிக்கப்பட்டவருக்கு உதவிய ஜெனிஃபர் முர்ரே என்ற அயர்லாந்து பெண்மணி, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தாக்கப்பட்ட நபர் மிகவும் காயமடைந்திருந்ததாகவும், மூளையில் ஸ்கேன் செய்யும் அளவுக்குத் தாக்குதல் பலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், மர்ம கும்பல் ஜூலை 3வது வாரத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவரது கூற்றை மெய்ப்பிக்கும்படி இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மேலும் தொடர்ந்தபடியே இருந்தன. ஜூலை 27ஆம் தேதி சந்தோஷ் யாதவ் என்பவர் டப்ளின் நகரில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல், அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன் கடுமையாகத் தாக்கவும் ஆரம்பித்தது. இதில், அவரின் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தியர்கள் மீது இனரீதியாகத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்கள், அயர்லாந்தில் வாழும் இந்தியர்களிடையே, அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தூதரக அதிகாரிகள், அயர்லாந்தில் இந்திய மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுப்பது குறித்து அயர்லாந்து நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக இரவு நேரங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ள பிரத்யேக உதவி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பலை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.