வித்தியாசமான சிரிப்புக்கு சொந்தக்காரரான பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப், உடல்நலக்குறைவால் காலமானார். அந்த பன்முகக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
நகைச்சுவைக் காட்சியைப்போல் மதன் பாப்பின் FLASH BACK-ஐ OPEN பண்ணிப் பார்த்தபோது பல்வேறு ஆச்சர்யங்கள் காத்திருந்தன. பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த மதன் பாப்-ன் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. அதே பெயரில் உறவினர் ஒருவரும் இருந்ததால் இவரை ‘மதன்’ என்று குடும்பத்தினர் அழைத்ததாகச் சொல்லப்படுகிறது.
சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த மதன் பாப், கிட்டார் வாசிக்க கற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் விற்பனை பிரதிநிதியாக சிலகாலம் பணியாற்றிய அவர், பின்னர் இசையையே தனது முழுநேர வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார்.
விளம்பரப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மதன் பாப் இசையமைத்தபோது அவரிடம் பணியாற்றியவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். அந்த வகையில் ஆஸ்கர் நாயகனின் இசை குருக்களில் மதன் பாப்-ம் ஒருவர்.
மேடை நாடகங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அதில் நடிக்கவும் செய்த மதன் பாப், 1984-ஆம் ஆண்டு ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். 1992-ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘வானமே எல்லை’ படம் மதன் பாப்-க்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
நகைச்சுவை மட்டுமின்றி பிற கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி, கமல் மற்றும் நாசரைத் தாண்டி மதன் பாப்-ன் நடிப்பு தனித்து தெரியும். தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள மதன் பாப், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
நகைச்சுவை தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக சிறப்பாக செயல்பட்டவர். பன்முகக் கலைஞனான அவரை புற்றுநோய் நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் குமரிமுத்துவுக்குப் பிறகு தனது சிரிப்பாலேயே ரசிகர்களை கவர்ந்த மதன் பாப், என்றும் அவர்களின் மனதில் நிலைத்திருப்பார்.