திருச்சுழி அருகே அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விறகு வெட்டி பிழைக்கும் ஏழைத்தாயின் மகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பூமாரி என்பவர் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் பொன்னழகுடன் தாத்தா வீட்டில் வசித்து வருகின்றனர்.
பொன்னழகு விறகுவெட்டி மகளை அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளார். திருச்சுழி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த பூமாரி 12ஆம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூ மாரிக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால், பல் மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாததால், மீண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பூமாரிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும், எம்பிபிஎஸ் படிப்பதற்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மாணவி பூமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.