பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அரசியலில் தீவிரமாக பணியாற்றி வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். கிடுகு பட இயக்குநர் வீரமுருகன் இயக்கியுள்ள கந்தன்மலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நெல்லையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் போஸ்டரை வெளியிட்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை பிரச்னை உட்பட பல்வேறு சமூக கருத்துகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த படத்தின் இயக்குநர் வீரமுருகன், கந்தன் மலை திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் வெளியீட்டு தேதியை ஹெச்.ராஜா அறிவிப்பார் எனவும் கூறினார்.