சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழர்களை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கடந்த மாதம் 26ஆம் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த நிலையில் அதில் பயணித்த பெண் நீரில் மூழ்கினார்.
இதையடுத்து அருகில் வேலை செய்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிச்சை உடையப்பன் சுப்பையா, வேல்முருகன், சரவணன், வீரசேகர், அஜித்குமார், சந்திரசேகரன், ராஜேந்திரன் ஆகிய 7 பேரும் விரைந்து சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்.
அவர்களின் துணிகர செயலுக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பாராட்டு தெரிவித்திருந்தார். இதேபோல், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் பயின்றுவந்த பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது அருகில் வேலை செய்து கொண்டிருந்த தமிழர்கள் உட்பட 4 பேர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மார்க் சங்கர் உட்பட ஏராளமான மாணவர்களைக் காப்பாற்றினர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் அதிபர் தர்மன் சண்முகரத்னம், இஸ்தானாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.