கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கு நீதிபதி நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்ரேட் கம்பெனி போல் அறநிலையத்துறை செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைவதாகத் தெரிவித்தனர்.
கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல, தெய்வங்கள் குடியிருக்கும் அங்கம் என்பதை உணர்ந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் பல கோயில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
புனரமைப்பு பணிகள் துவங்கும் முன் சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோயிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற அறிவுறுத்திய நீதிபதிகள்,
புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களைத் தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பொருட்கள் ரசாயனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.