ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே ஒருவர் கணித்துக் கூறியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் கூறிய ஆருடங்கள் என்னென்ன? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஜூலை 31ஆம் தேதி ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 8.8ஆக பதிவானது. 6 அல்லது 7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலே, அது பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இந்நிலையில், 8.8 என்ற அளவில் அதிர்வு ஏற்பட்டதால் அதன் பாதிப்புகளை விவரிக்கத் தேவையில்லை. வரலாற்றில் இதுவரை பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இதனை, அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. ரஷ்யாவிற்குச் சொந்தமான குரில் தீவுகளில் கடல்நீர் உட்புகுந்து கட்டடங்களைச் சூழ்ந்தது. அதேபோல், ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள துறைமுகங்களும் சேதமடைந்தன. 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் மேலும் அதிகரித்தது.
இப்படிப் பல பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் பற்றி, ரியோ டாட்சுகி என்ற காமிக்ஸ் எழுத்தாளர் முன்பே கணித்துக் கூறியிருந்ததுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இவர் இதற்கும் முன்பும் இதேபோன்ற பல தீர்க்கதரிசனங்களைக் கூறியுள்ளார்.
காமிக்ஸ் எழுத்தாளரான ரியோ டாட்சுகி , 1999ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். நான் கண்ட எதிர்காலம் என்பது அதன் தலைப்பு. அந்த புத்தகத்தில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதன்படியே, அந்தாண்டு, ஜப்பானின் வடக்கு டோஹோகு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு “முழுமையான பதிப்பு” என்ற பெயரில் மற்றொரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதில்தான், அண்மையில் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆருடம் கூறப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்படும் என ரியோ டாட்சுகி அதில் கூறியிருந்தார்.
இதனை அறிந்த பல மக்கள் குறிப்பிட்ட அந்த மாதத்தில் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினார். மக்களின் அச்சத்தைப் போக்க, நிலநடுக்கம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.
ஆனால், ரியோ டாட்சுகி கணித்தது போலவே நடந்தது. ரஷ்யா மற்றும் ஜப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரியோ டாட்சுகி என்பவர் குறித்தும், அவரது ஆருடங்கள் குறித்தும் இணையத்தில் பலர் தேடி வருகின்றனர். மேலும், நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் ரியோ டாட்சுகியை வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.