புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட நபர்களை அதிமுக நிர்வாகி மற்றும் அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சுவிடுதி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பாதையை ஆக்கிரமித்த அதிமுக நிர்வாகி தர்மராஜ், வீடு கட்டி வந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தோர் புகாரளித்த நிலையில், வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என தர்மராஜிடம் போலீசார் எழுதி வாங்கியுள்ளனர்.
ஆனால், தடையை மீறி தர்மராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், தர்மராஜிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.
அப்போது, கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை தர்மராஜ் தரப்பினர் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த கணேசன் உட்பட 5 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.