கன்னியாகுமரியில் கனிமவள குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கட்டுமான பணிகளுக்கான கனிமவள பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கட்டுமான கனிமவள பொருட்களுக்கான அனுமதிச் சீட்டு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் கட்டுமான பணிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
அதே நேரத்தில் கேரளாவிற்கான கட்டுமான கனிமவள பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு 80 சதவீத பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடைபெற்று வரும் குளறுபடிகளைக் கண்டித்து, சித்திரங்கோட்டில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வால் உள்ளூர்வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.