தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதியடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெய்த காற்றுடன் கூடிய மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் ஏற்காட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், திடீரென பலத்த மழை பெய்தது. இரட்டை மண்டபம், பூக்கடை சத்திரம், வையாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதே போல மதுரை மாநகரின் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பரவலான மழை பெய்தது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.