தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இந்நிலையில், ஜெயசூர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கல்லூரியில் உடன் படித்த மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியைத் தனது மகன் காதலித்து வந்ததால், மாணவியின் உறவினர்கள் அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி,
பல உண்மைகள் வெளியில் வராமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.