காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி என்பவர் தைராய்டு பிரச்சனைக்குக் கடந்த ஓராண்டாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாதந்தோறும் தைராய்டு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் விருதுநகர் சென்றுவரச் சிரமமாக இருப்பதாகக் கூறி காரியபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளப் பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கோரியுள்ளார்.
கடந்த 27ஆம் தேதி மருத்துவரின் பரிந்துரைப்படி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட அழகு ராணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுராணி மாத்திரையை மாற்றி உட்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அழகு ராணி, மாத்திரையை மாற்றிக் கொடுத்து அஜாக்கிரதையாகச் செயல்பட்ட மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.