திண்டுக்கல் அடுத்த பொம்மனபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடியேற்றி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மனபுரம் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவை செய்துதரப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீர், உப்பு கலந்து வருவதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அடிப்படை வசதிகளைச் செய்துதராவிட்டால் வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.