உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் கங்கா ஆற்றில் மேகவெடிப்பால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலர் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கீர் கங்கா ஆற்றின் மறுபுறத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சியானா சட்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.