சென்னை தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் அதிகாரிகள் முறைகேடு செய்த நிலையில், முறையாக வரி செலுத்தியவர்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அளிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் தாம்பரம் மாநகராட்சியின் 4-வது மண்டலத்துக்குட்பட்ட பெருங்களத்தூரில் 1 கோடி ரூபாய் வரிப்பணமும், 5-வது மண்டலத்தில் 32 லட்சம் ரூபாய் வரிப்பணமும் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் போலி ரசீதுகள் மூலம் ஏமாந்த மக்களுக்கான நிவாரணம் குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் போலி ரசீதுகளால் ஏமாந்த மக்கள் மீண்டும் வரிப்பணத்தை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சள் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வரி செலுத்தாவிட்டால் வீட்டில் உள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கையாடல் செய்த அதிகாரிகளிடம் இருந்து பணத்தை மீட்டு வரி செலுத்துவதை விட்டுவிட்டு, தங்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க குழு அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.