மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டோர்களை விலக்கச் சென்ற காவல் ஆய்வாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மனதை பதைபதைக்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் குடிப்பழக்கத்தாலும் போதைப்பொருள் புழக்கத்தாலும் பொது மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், மக்களைக் காக்கும் காவல்துறையினரின் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார்.
பொதுவெளியில் மது அருந்துவதும், மதுபோதையில் மற்றவர்களைத் தொந்தரவு செய்வதும், அதைத் தட்டிக்கேட்பவர்களைக் கொலை செய்வதும் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
எனவே, தங்கள் நிர்வாகக் குளறுபடிகளால் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையைக் கொடுத்து மக்களை மடைமாற்றி விடலாம் என்ற திமுகவின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முடியாமல் அனைத்துப் பிரிவினரையும் அவதிக்குள்ளாக்கும் இந்த அறிவாலய அரசின் ஆட்சிக்காலம் எப்போது முடியும் என மக்கள் பிரார்த்திக்கத் துவங்கிவிட்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் அனைத்து வேண்டுதல்களும் பலிக்கும்! திமுக ஆட்சி ஒழியும் என நயினார் கூறியுள்ளார்.