காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், ஏராளமான சீன ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான குல்மார்க் மற்றும் பஹல்காமை போலவே வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை உருவாக்கும் கிஷென் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த நகரம்.
கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 5300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மாவட்டம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்தும் ஷெல் தாக்குதல்ககளில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 83 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்வாராவில் கடந்த மூன்று நாட்களாகப் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க குப்வாரா கலாரூஸ் குகைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. குப்வாரா மாவட்டத்தின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள கலாரூஸ் குகைகள் எப்போதும் மர்மம் நிறைந்தவையாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ரஷ்யாவுடன் இணைக்கும் ஒரு புராணக் கதையும் இந்தக் குகைகள் பற்றிக் கூறப்படுகின்றன.
இந்த குகைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய வர்த்தகர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பின் ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை ஆப்ரேஷன் சிவசக்தி என்ற பெயரில் தீவிரப்படுத்தப்பட்டன.
அதன் ஒருபகுதியாக குப்வாராவில் உள்ள கலாரூஸ் குகைகளில் தேடுதல் வேட்டை நடந்தது. அந்த குகைகளில், 12 சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகளுடன் கூடிய சீன கைத்துப்பாக்கி, Kenwood radio set, உருது மொழியில் எழுதப்பட்டுள்ள IED கையேடுகள் மற்றும் தீ குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கு காஷ்மீரில், மீண்டும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான முயற்சிகளையே இந்த ஆயுதங்கள் காட்டுகின்றன. வரும் நாட்களில் மாநில காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்த, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானிலிருந்து உத்தரவு வந்துள்ளது என இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் படி,இந்த அதிரடி தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம், பயங்கரவாதிகள் மூலம் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியிலும் தொடர்ந்து பயங்கரவாதிகளைத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பூஞ்ச் பகுதியில், கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, CRPF மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு இடையே அதிகரித்த ஒருங்கிணைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுக்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றன.