திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய மூவரும் மடத்துக்குளம் அருகே தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மூவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற குடிமங்கலம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், மூவரையும் சமாதானப்படுத்தி காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, எஸ்எஸ்ஐ சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகிய இருவரும் எஸ்.பி அலுவலகத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.