ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீபாராதனை நடைபெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள கவுதம ஈஸ்வரர் ஆலயத்தில் நடந்த பிரதோஷ பூஜையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பிரதோஷ நாளில் ஈசனின் அருளைப் பெற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள களியங்காடு சிவன் கோவிலில் மூலவர் சிவனுக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், சந்தனம் உட்பட 16 வகையான நறுமணப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.