திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தேனீர் கடையில் வாங்கிய பொருளுக்குப் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி செயல்பட்டு வரும் தேனீர் கடை ஒன்றில் புகழேந்தி என்பவர் உணவுப்பொருட்களையும், சிகரட்டையும் வாங்கி உள்ளார்.
இதற்கான பணத்தைத் தர மறுத்த புகழேந்தி கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடி பெட்டியை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கையில் ஆயுதத்துடன் மீண்டும் வந்த புகழேந்தி கடையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றார்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புகழேந்தியைக் கைது செய்ததுடன், கடையை மூடக்கோரி வற்புறுத்தினர். அப்போது அங்குத் திரண்ட வணிகர் சங்க நிர்வாகிகள் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் கடையை ஏன் மூட கட்டாயப்படுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.