உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன?, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க விஞ்ஞானிகள் கூறும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காட்சிகள் இவை. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், வீடுகள், கடைகள், கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்துச் சென்றது. இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தாராலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்களும் மாயமாகினர். திடீர் நிலச்சரிவால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இமயமலை பகுதியில் இது போன்ற நிலச்சரிவு ஏற்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.
2013ஆம் ஆண்டு கேதார்நாத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1970ஆம் ஆண்டு உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஏற்பட்ட இதேபோன்ற நிலச்சரிவால், பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
2011ஆம் ஆண்டு ரிஷிகங்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், தபோவன் அணை இடிந்தது. இது 200 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. இப்படி, இமய மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய நிலச்சரிவுகள், Glacial Lake Outburst Flood மற்றும் Low Level Overflow என அழைக்கப்படுகிறது.
மலைப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீராக வழிந்தோடி ஓரிடத்தில் ஏரி போலத் தேங்குகின்றன. சில நேரங்களில இத்தகைய ஏரிகளின் கரையில் உடைப்பு ஏற்படுவதால், ஒரே நேரத்தில் அதிகப்படியான நீர் கீழ்நோக்கி பாய்கிறது. இது, Glacial Lake Outburst Flood என அழைக்கப்படுகிறது. மாறாக, அத்தகைய ஏரிகளில் இருந்து படிப்படியாகக் குறைந்த அளவில் தண்ணீர் வெளியேறுவது Low Level Overflow எனக் குறிப்பிடப்படுகிறது.
இமய மலைப்பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இவைதான் முக்கிய காரணமாக உள்ளன. இமயமலையில் உள்ள பனி ஏரிகள் இத்தகைய முறைகளில் மீண்டும் உடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
2050ஆம் ஆண்டில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான பனிப்பாறைகள் உருகும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், Glacial Lake Outburst Flood மற்றும் Low Level Overflow-வால் ஏற்படும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் எனக் கூறப்படுகிறது. அப்படி ஏற்பட்டால், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பிலான பகுதிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
இதனைத் தடுக்க, மலைகளில் உள்ள பனி ஏரிகளைச் செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்தப்படி இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் கட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இயற்கை வடிகால் அமைப்புகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இப்போது இருந்தே இதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கினால், எதிர்காலத்தில் இத்தகைய சேதங்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.