திமுகவை தமிழகத்திலிருந்து வேருடன் அகற்ற பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர்டி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கேசவ விநாயகம், திமுகவைத் தமிழகத்திலிருந்து வேருடன் அகற்ற பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும் திமுகவை அகற்ற பணியாற்றினால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கேசவ விநாயகம் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஜெயசீலன், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதால் விரைவில் ஆட்சி அகற்றப்படும் என்றும் ஜெயசீலன் தெரிவித்தார்.