பல்வேறு காரணங்களால் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது வழக்கம். ஆனால், மொத்த நாடே ஒட்டுமொத்தமாக வேறு பகுதிக்கு இடம் பெயரும் நிகழ்வு ஆஸ்திரேலியா அருகே நிகழ்ந்து வருகிறது. என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.
நான்கு புறமும் கடல். எங்கும் பசுமை. நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள். தூய்மையான சாலைகள். நீலநிற கடற்கரை. இப்படி, பார்ப்பதற்கே கொள்ளை அழகாக உள்ளதல்லவா. இந்த நிலப்பரப்புதான் இன்னும் சில ஆண்டுகளில், இருந்த தடயமே இல்லாமல் காணாமல் போகப் போகிறது.
இந்த சிறிய நிலப்பரப்பு ஒரு நாடு. பெயர் துவாலு. சுமார் 11 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, வெறும் 25 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்டுள்ளது. இதன் காரணமாக உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் துவாலு 4ஆவது இடத்தில் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த தீவு நாடு, 9 பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
நான்கு புறமும் சூழ்ந்து இந்த நாட்டிற்கு எழில் சேர்க்கும் இந்த கடற்பரப்புதான், இந்த நாட்டிற்கு எமனாகவும் மாறியுள்ளது. காரணம், கடல் மட்டத்தில் இருந்து வெறும் 2 மீட்டர் உயரத்தில்தான் துவாலு அமைந்துள்ளது. இதன் காரணமாகத் தொடர்ந்து கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகிறது. இப்படியே சென்றால், மொத்த நாடே கடலுக்கு அடியில் சென்றுவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல் அரிப்பிலிருந்தும், கடல்நீர் மட்டம் உயர்வதில் இருந்தும் தப்பிக்க துவாலு நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, நாட்டையே ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டுப் பாதுகாப்பான வேறு இடத்திற்குக் கிளம்பிச் செல்வது.
பல நாடுகள் கடலுக்கு அடியில் சென்றதை வரலாற்றில் படித்துள்ளோம். லெமுரியா என்ற ஒரு கண்டமே கடலில் மூழ்கியதாகக் கேள்விப்பட்டுள்ளோம். இவற்றிற்கு எல்லாம் நிகழ்கால உதாரணமாக உள்ளது துவாலா. நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட அந்நாட்டு மக்கள், வேறு பகுதிகளுக்குக் குடிபெயரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்களுக்குக் குடிபெயர்வுக்கான முதல் தேர்வாக ஆஸ்திரேலியா விளங்கி வருகிறது. ஏனென்றால் துவாலுக்கு அருகே உள்ள மிகப்பெரிய நாடு அதுதான்.
மறுபுறம், துவாலு மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசும் நேசக்கரம் நீட்டி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் 280 துவாலு மக்களுக்கு நிரந்தர வாழ்விடம் வழங்கும் வகையில், 2023ஆம் ஆண்டு தனி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
துவாலு மட்டுமல்ல பல்வேறு நாடுகள் கடல் நீர்மட்டம் உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நாடுகளைப் பாதுகாக்கச் சர்வதேச அளவில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள, துவாலு நாட்டின் பிரதமர் ஃபெலெட்டி தியோ வலியுறுத்தி வருகிறார்.
ஏனென்றால், ஒரு நாடு அழியும்போது, வெறும் நிலப்பரப்பு மட்டும் அழிவதில்லை. அதன் தனித்துவம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்று எச்சங்கள் உள்ளிட்டவையும்தான் சேர்ந்து அழிகின்றன.