ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வழுதூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற திருவிழாவின் வரவு செலவு கணக்குகளை திமுக பிரமுகர் கவுதம் என்பவர் கவனித்து வந்தார்.
அப்போது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பகை நீடித்து வந்த நிலையில் கவுதமின் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை உடைத்தும், அனைவரையும் மிரட்டி விட்டும் சென்றது.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துவிட்டு புகார் மனு அளிக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் அங்கு வந்த அதே கும்பல் பெட்ரோல் குண்டை கவுதமின் வீட்டின் மீது வீசிவிட்டுத் தப்பியோடியது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபு, அலெக்ஸ், ரஞ்சித் உட்பட 5 நபர்களைத் தேடி வருகின்றனர்.