சுதந்திர நாள் நெருங்கி வரும் நிலையில், தேசப் பிரிவினையின் போது நடந்த சம்பவங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
சோடேபூர் ஆசிரமத்தில்,பிரார்த்தனைக்குப் பின், மக்களிடையே பேசிய காந்தி, முஸ்லீம் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால்,நவகாளி பயணத்தைத் தள்ளி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
பிறகு, காங்கிரஸ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த காந்தி, கல்கத்தாவில் ஒவ்வொரு முஸ்லீமும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், அதை அரசு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் கூறினார். டெல்லியில், மந்திர் சாலையில் அமைந்துள்ள இந்து மகாசபா பவனில், அகில இந்திய இந்து பார்லிமென்ட் கூட்டம் நடந்தது.
பிரிட்டிஷ் அரசு முன்வைத்த பிரிவினை திட்டத்தை ஏற்றுக்கொண்டு, லட்சக்கணக்கான இந்துக்களின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது என்று ஜஸ்டிஸ் நிர்மல் சட்டர்ஜி தெரிவித்தார்.
கூட்டத்தின் நிறைவில் உரையாற்றிய சாவர்க்கர், இனி, அரசிடம் கெஞ்சுவதில் பயனில்லை என்பதால், நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேலும், இந்து கூட்டமைப்பில் உள்ள அனைத்து இந்துக்களும், பிளவுபடாத இந்தியாவுக்காக, அகண்ட பாரதத்துக்கான சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய இந்தியாவை உருவாக்க, கட்சி பேதமில்லாமல், இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காவிக் கொடி தான் இந்த தேசத்தின் கொடியாக இருக்கவேண்டும். இந்தி தான் இந்தத் தேசத்தின் மொழியாக இருக்கவேண்டும். இந்தியா இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அதே நேரம், பாகிஸ்தானில், ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக அறிவிக்கப் பட்டார். பாகிஸ்தானின் நாடாளுமன்ற அலுவல் பதிவேட்டில் ஜின்னா கையெழுத்திட்டார். பாகிஸ்தான் அரசியல் சாசன சபையின் தலைவராக வங்காளத்தின் ஜோகேந்திர நாத் மண்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வங்காளத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கொடூர வன்முறைகளின் போது, முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனத் தலித் மக்களை ஜோகேந்திர நாத் மண்டல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக வங்காளம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் லாகூரில் உள்ள பருத்கானா பகுதியில் உள்ள முஸ்லீம்கள் உற்சாகத்துடன் காணப் பட்டனர். இந்தப் பகுதியில் தான், இந்து மற்றும் சீக்கிய பெண்களைக் கடத்தும் முஸ்லீம் பயங்கரவாதிகள் தங்குவதற்கான இடத்தைக் கொடுத்தனர்.மேலும் அவர்களுக்கு உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அதேநேரம் டெல்லியில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகத்துக்கு வெளியே முஸ்லீம்கள் கடும் கோபத்தில் இருந்தனர். தங்களை விட்டுவிட்டு, முஸ்லீம் லீக் தலைவர்கள் மட்டும் கராச்சிக்குச் சென்று கொண்டிருந்ததே அவர்களின் கோபத்துக்குக் காரணம். பஞ்சாப், அமிர்தசரஸ் , லியால்பூர்,போன்ற நகரங்களில் பயங்கர வன்முறைகள் நடப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்கவிருந்த லியாகத் அலி, பாகிஸ்தானில் இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தியாவில் தான் முஸ்லீம்களை இந்துக்கள் சித்ரவதை செய்வதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதேசமயம் லாகூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், ஆயிரக்கணக்கான தேசத் தொண்டர்கள் கூடியிருந்தனர். அங்குள்ள இந்துக்களையும் சீக்கியர்களையும் எப்படி பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற எண்ணமே ஒவ்வொரு ஸ்வ்யம் சேவகர்களின் நெஞ்சத்தில் ஓடிக் கொண்டிருந்தது.