கொல்கத்தாவில் நடைபெற்ற ‘நபன்னா அபிஜன்’ பேரணியின்போது போலீசார் நடத்திய தடியடியில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பெற்றோர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் கடந்தாண்டு இதே நாளில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். உயிரிழந்த மாணவியின் பெற்றோரும் பேரணியில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்போது, அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அப்போது உயிரிழந்த மாணவியின் பெற்றோரும் தடியடியில் காயமடைந்தனர். இதுகுறித்து பேசிய மாணவியின் தாய், போலீசார் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.