திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் செங்கல் சூளையில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்பலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் செங்கல் சூளையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் கணக்கராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், செங்கல் சூளையில் சரவணன் உயிரிழந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் சரவணனின் உடலைக் கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சரவணனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல் சூளையில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் தான் சரவணனை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டிய உறவினர்கள், அவர்களைக் கைது செய்யக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.