ஸ்ரீராமர் குறித்து சர்ச்சையாகப் பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீராமர் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சையானது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், வைரமுத்துவின் இந்துவிரோதப் போக்கை முதலமைச்சரும், ஜெகத்ரட்கனும் ஆமோதிக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத ஒற்றுமை குறித்து மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினர் இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்காதது ஏன்? எனவும் அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை இந்துக்களாக இருக்கும்போது இது போன்ற கருத்துகள் திமுகவினரையும் புண்படுத்தும் என்பது தெரியாதா? எனவும் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
தனது அவதூறான கருத்துகளுக்குப் பொதுவெளியில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மத நல்லிணக்கத்தின் தூணாக முன்னிறுத்திக் கொள்ளும் திமுக அரசு அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.