ஏலியன்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் தனித்திருக்கிறோம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஏற்க மறுக்கின்றனர். வேற்று கிரகங்களில் நம்மைப் போன்றவர்களோ அல்லது நம்மைவிட மேலான அறிவு கொண்டவர்களோ இருக்கலாமென அவர்கள் திடமாக நம்புகின்றனர். இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்தான் பூமியை நோக்கி ஒரு மர்மபொருள் வந்துகொண்டிருக்கிறது என்ற அந்தச் செய்தி அண்மையில் வெளியானது. அந்தப் பொருள் சாதாரண எரிகல்லாகவோ, வால் நட்சத்திரமாகவோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர். விநாடிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அந்தப் பொருள், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரம் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக உள்ளது.
ஆனால், அது வால் நட்சத்திரமாகவோ அல்லது எரிகல்லாகவோ இருக்கலாம் என்ற யூகத்தை விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுக்கின்றனர். அது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பி வைத்த விண்கலன்தான் எனவும் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
இந்த விண்கலம் உண்மையிலேயே ஏலியன்கள் அனுப்பியதா? தெரியாது. அதன் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வரவுள்ளனரா? தெரியாது. அப்படியே பூமிக்கு வந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் பதிலில்லை. எனவே, மனிதர்களாகிய நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இது கறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வானியல் துறைத் தலைவர் டாக்டர் அவி லோப், “ஒருவேளை ஏலியன்கள் பூமிக்கு வந்தால் நமக்கு உதவலாம். அல்லது அவர்கள் நம்மை அழிக்கலாம். எனவே எதற்கும் தயாராக இருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பூமியை நோக்கி வரும் பொருள், வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இந்தப் பொருளின் முன்பகுதி பிரகாசமாக உள்ளதை சுட்டிக்காட்டும் அவர், மனித குலம் இது போன்ற ஒன்றை இதற்கு முன் பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார்.
அந்தப் பொருளின் தனித்தன்மையை பார்க்கும்போது, அது நிச்சயமாக அறிவார்ந்த மற்றொரு சமூகத்தால் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், வருவது விண்கலம் என்பதையும், அதில் பயணிப்பவர்கள் ஏலியன்கள் என்பதையும் நாசா ஏற்கவில்லை. அந்த பொருள் குறித்து இப்படி இரு வேறு கருத்துக்கள் நிலவி வருவதால், அதனை ஆய்வு செய்யும் பணி இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.