மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மதுரை மாநகரின் மையப் பகுதியாக உள்ள டவுன்ஹால் ரோடு பகுதியில் கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் கோயில் நிர்வாகத்தின் நிபந்தனைகளை மீறி இடத்தை ஆக்கிரமித்து நூற்றுக்கும் அதிகமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டது.
இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தினர் அகற்றினர். இதனையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.