மாநகராட்சி அலுவலகம் முன்பு தான் போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 7 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழுவினரான ”உழைப்போர் உரிமை இயக்கம்”, சிஐடியு மற்றும் AICCTU சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி, தூய்மை பணியாளர்களின் கண்ணீருக்கு திமுக காரணமாக உள்ளதென தெரிவித்தார்.
முன்னாள் நீதிபதிகள் ஹரி பரந்தாமன், சந்துரு ஆகியோர் முன்பு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக கூறினார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அப்போது, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு வரவழைத்து சந்தித்தார்.அப்போது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை வெற்றி பெறும் வரை தமிழக வெற்றிக் கழகம் உங்களுடன் துணை நிற்கும் என விஜய் உறுதி அளித்ததாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.