சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்குச் சிறந்த அடையாளமாகவும், வனத்தின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் யானைகளின் தினம் கொண்டாடப்படுகிறது. காடுகள் அழிப்பு, தந்தங்கள் வெட்டி எடுப்பு என யானைகளின் இனம் படிப்படியாக அழிந்து வரும் நிலையில் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், யானைகளின் பாதுகாப்பிற்கான தீர்வுகளைச் சர்வதேச அளவில் முன்னெடுக்கவும் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக வனத்துறையின் அறிக்கையின் படியும், 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் படியும் தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
யானைகள் தனக்குத் தேவையான உணவைப் பெற சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு பயணம் மேற்கொண்டு யானைகள் உண்ணும் உணவில் செரிமானம் ஆகாமல் வெளியே வரும் விதைகளின் மூலம் தாவரங்கள் வளர தொடங்குவதாகக் கூறப்படுகிறது. அதோடு, வனப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து தாவர உண்ணிகளுக்கும் அவசியத் தேவைகளில் ஒன்றான உப்பு மண்ணை கண்டுபிடிப்பதிலும் யானைகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. முதுமலை காப்பகத்தில் உள்ள யானைகளுக்குக் கும்கி பயிற்சி வழங்கப்படுவதால், ஊருக்குள் நுழையும் யானைகளை வெளியேற்றவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுவதே அவைகள் உணவு தேடி ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. தாவர உண்ணிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் உறுதுணையாக இருக்கும் யானைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.