ஒரு மாணவர் கூட இல்லாததால் தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 31 ஆயிரத்து 332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பல பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு மாணவர் கூட இல்லாததால் 207 பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும் சிவகங்கை மாவட்டத்தில் 16 பள்ளிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 பள்ளிகளும் சென்னை, ஈரோடு, மதுரை மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியபோது, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததாகவும் கொரோனா முடிந்த பின் மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர் படையெடுத்து வருவதாகவும் கூறினார்.
மாணவ – மாணவியர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ள பள்ளிகளில் வேலை செய்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.