தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனைக் கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பு 12 நாட்களாகத் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத நிலையில் சீமான், விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சுமார் 20 லட்சம் மக்களுக்கான சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைச் சுட்டிக்காட்டியுள்ள சென்னை மாநகராட்சி, எந்த ஒரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. எனவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.