தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் படகைத் துரத்தும்போது, சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தால் சீனாவுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தென் சீனக் கடல், எப்போதும் பரபரப்பாக இருக்கும் உலகின் முக்கியமான கடல் பாதையாகும். உலக அளவில், 60 சதவீதத்துக்கும் அதிகமான வர்த்தகம் இதன் மூலமே நடைபெறுகிறது. தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
1990களில், பிலிப்பைன்ஸில் அமெரிக்கா ராணுவத் தளங்களை மூடியதும், மணிலாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் உள்ள மிஷீஃப் ரீஃப்பைச் சீனா கைப்பற்றியது. அப்போதிலிருந்தே சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் மோதல் தொடங்கியது.
தொடர்ந்து, பிலிப்பைன்ஸிலிருந்து ஸ்கார்பரோ ஷோலை சீனா கைப்பற்றியபோது நிலைமை இன்னும் மீண்டும் மோசமடைந்தது. பிலிப்பைன்ஸ் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சீனா துன்புறுத்துவது இன்றும் தொடர்கிறது.
இந்த கடலோரப் பகுதி என்பது பாறைகள் மற்றும் பாறைகளின் முக்கோண வடிவ சங்கிலியாகும். இந்த கடற்கரையில் ஏராளமான மீன்கள் உள்ளன. தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தப் பகுதியில்,ஆண்டு தோறும் சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
வியட்நாம், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலின் சில பகுதிகள் தங்களுக்கு உரிமை உள்ளன என்று சொல்லுகின்றன. கடந்த ஆண்டுகளில், கடல் உரிமை குறித்து சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இரண்டாண்டுகளுக்கு முன், ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாட்டின் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து நிலைமை சிறிதும் மேம்படவில்லை.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் படகு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில், தங்களைத் துரத்தி வந்த இரண்டு சீனக் கப்பல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகளை, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவற்படை வெளியிட்டுள்ளது. இது குறித்து, சீனா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் தென் சீனக் கடலில் தங்கள் எல்லையைக் கண்காணித்து வருவதாகவும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு, சர்ச்சைக்குரிய இந்த தென் சீனக் கடலில் எட்டுக்கும் மேற்பட்ட படகுகளில் சீன கடலோர காவல்படை வீரர்கள், இரண்டு பிலிப்பைன்ஸ் கடற்படை படகுகள் மீது ஆக்ரோஷமாக மோதினார்கள். வாள்கள், ஈட்டிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய சீன கடலோர காவல்படை வீரர்களை எதிர்த்து வெறும் கைகளுடன் பிலிப்பைன்ஸ் வீரர்கள் சண்டையிட்டதாக அந்நாட்டின் உயர் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். மேலும் அந்த மோதலில்,ஒரு பிலிப்பைன்ஸ் வீரர் தம் கட்டைவிரலை இழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தென் சீனக் கடலில் ஏற்படும் எந்தவொரு சண்டையும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர்ச்சுழலை உருவாக்கக் கூடும் என்று புவிசார் அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.