செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கார்த்திகேயன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், சிறப்பு நீதிமன்றத்தில் மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றினால் விசாரணை பாதிக்கப்படும் எனத் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.