புற்றுநோய்க்கு வெறும் 7 நிமிடங்களில் சிகிச்சை தரும் மருந்துக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
உலகம் முழுவதும் புற்றுநோய் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில், யாருக்கு, எப்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்ற கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. புற்றுநோய் சாதாரணமானதாக மாறி விட்டாலும், அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
தற்போது புற்றுநோய்க்கு ROCHE என்ற சுவிஸ் நிறுவனத்தின் அடிஸோலிஸுமாப் (Atezolizumab) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது செயல்பட 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும் என்ற நிலையில், அதன் செயல்பாட்டை 7 நிமிடங்களாக குறைக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 4ம் நிலை பரிசோதனையில் இருக்கும் மருந்துக்கு இந்தியா ஒப்புதல் வழங்க உள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததும், இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான ஒப்புதலை வழங்கும் என்று தெரிகிறது.