மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேயரின் கணவர் பொன் வசந்த், அதிக ரத்த அழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் 3 கவுன்சிலர்கள் சொத்துவரி குறைப்பு விவகாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்த பொன் வசந்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும், மதுரையில் பணியாற்றி தூத்துக்குடி மாநகராட்சிக்கு பணி மாறுதலாகி சென்ற உதவி ஆணையர் சுரேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பொன் வசந்தை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, அவருக்கு அதிகளவில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 114வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.