தேனியில் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டவரின் இறப்பிற்குக் காரணமானவர்களை, கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர், சீனிவாசன், லட்சுமி மற்றும் தாமோதரன் ஆகியோர் அவரை வீடு கட்ட விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் கடந்த 11-ம் தேதி, பிரச்சனை தொடர்பாகத் தனது செல்போனில் ஆடியோ பதிவு செய்து வைத்துவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் கண்டமனூர் போலீசார், சம்மந்தப்பட்டவர்கள் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தேனி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பாண்டியராஜனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஆண்டிப்பட்டி காவல் ஆய்வாளர் சரவண குமார் மற்றும் ராஜதானி காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன், அவர்களைக் கைது செய்து தர தரவென இழுத்துச் சென்று மினி வேனில் அடைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.