பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் பரிதவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரோ ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி திளைக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் தேசப்பற்றைப் புறந்தள்ளி பல்வேறு நிறுவனங்கள் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமாகத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் துவண்டு போனது பாகிஸ்தான்…. அத்தகைய சூழலில் விட்டில் பூச்சி போன்று வெளிச்சத்திற்கு வந்தவர்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்.
பாகிஸ்தான் பொருளாதாரம் அதள பாதாளத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் சொகுசு வாழ்க்கையில் மூழ்கி திளைத்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்…. பாகிஸ்தானில் உள்ள ராணுவத் தலைவர்கள் பெரும்பாலும் நாட்டிற்குச் சேவை செய்வதை விட தங்களது செல்வத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று அந்நாட்டு மக்களாலேயே குற்றம்சாட்டப்படுகிறார்கள்.
இதன் பின்னணியை ஆராய்ந்தால், பாகிஸ்தான் ராணுவம்,வெறும் ராணுவம் மட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் கோடி கோடியாய் இலாபம் ஈட்டக்கூடியவை என்பதால், ராணுவத்திற்கு மிகப்பெரிய வருவாய் கிடைக்கிறது. இதில் ராணுவ தளபதி அசிம் முனீருக்கும் கணிசமான தொகை கிடைக்கிறது. எனவேதான் பாகிஸ்தானில் ராணுவ பதவி என்பது மிகுந்த இலாபகரமானதாகவும், பலன் அளிக்கக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாகப் பாகிஸ்தானில் ராணுவத் தளபதி பதவி என்பது, மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி பதவிக்கு ஒப்பானது. அப்படிப் பார்த்தால், அசிம் முனீர் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியாக இருக்கிறார் என்பது புலப்படும்… ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கூட இத்தனை நிறுவனங்களில் தலைமைச்செயல் அதிகாரியாக இருந்ததில்லை…
ஒரு நாட்டில் ராணுவத்தின் முக்கிய செயல்பாடு என்பது பாதுகாப்பாகவே இருக்கும், ஆனால் பாகிஸ்தானிலோ, ராணுவம் பாதுகாப்புத்துறையில் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம், நாட்டின் பொருளாதாரத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஃபாவ்ஜி அறக்கட்டளை, ராணுவ நல அறக்கட்டளை, ஷாஹீன் அறக்கட்டளை, பஹ்ரியா அறக்கட்டளை உள்ளிட்டவற்றை நாட்டின் நலனுக்காக நடத்தி வருவதாகக் கூறினாலும், உண்மையில் அவை மிகவும் சக்திவாய்ந்த நிறுவன வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ராணுவம் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவதோடு, பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. சிமெண்ட், உரம், வங்கி, பால், போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி போன்ற துறைகளிலும் கோலோச்சி வரும் பாகிஸ்தான் ராணுவம், பரந்த வணிக சாம்ராஜ்யத்தைக் கொண்டுள்ளது.
ராணுவத்தின வணிக நடவடிக்கைகள் நாடு முழுவதும் பரவியிருந்தாலும், ரியல் எஸ்டேட் துறையில்தான் இலாபத்தைக் குவித்து வருகிறது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் நிலத்தை கையகப்படுத்தும் பாகிஸ்தான் ராணுவம், வணிக நோக்கத்துடன் வீட்டுவசதி திட்டங்களாக மாற்றி கோடி கோடியாய் வருவாயை ஈட்டுகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ராணுவ வீட்டுவசதி ஆணையம் மிகப்பெரிய பிராண்டாகவே மாறிவிட்டது. இதன் நிகர மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால் ராணுவத்தின் இந்த வருமானம் குறித்த வெளிப்படையான பதிவு எதுவும் இல்லை. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த புள்ளிவிவரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் சொத்து மதிப்பு 7 கோடி என்று கூறப்பட்டாலும், ரகசிய வணிகங்களைப் பார்த்தால் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. 2018-ல் ராணுவ தளபதியாக இருந்த கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு சொத்தே இல்லாத நிலையில், 2022ம் ஆண்டு ஓய்வு பெறும்போது அவரது சொத்துமதிப்பு 130 கோடியாக உயர்ந்ததே அதற்குச் சான்று. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பாகிஸ்தானில் ராணுவ பதவி என்பது பணத்தையும், புகழையும் சம்பாதிக்கும் இடமாகவே பார்க்கப்படுகிறது.