சுதந்திர தினத்தையொட்டி சேலத்தில் மூவர்ண ஆடைகளின் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கும் மூவர்ண ஆடைகள் குறித்தும் அதன் விற்பனை குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக வெள்ளை சட்டைகள், தேசியக் கொடிகள், பேட்ஜ் ஆகியவை மட்டுமே சுதந்திர தினத்திற்குப் பயன்படுத்தும் நிலையில் நடப்பாண்டில் புதிய வரவாக மூவர்ண ஆடைகள் அறிமுகமாகியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விரும்பி வாங்குவதால் மூவர்ண ஆடைகளின் விற்பனை சேலத்தில் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திர தினம் தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களின் போது மட்டுமே மூவர்ண ஆடைகளை வழக்கமாகக் கொண்டிருந்த மக்கள் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் ஆடைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணியும் சேலைகள், சுடிதார் வகைகள், டீ சர்ட் வகைகள் என பல்வேறு ரகங்களில் மூவர்ண ஆடைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையை கடைப்பிடிக்கும் தமிழக மக்களுக்கு இந்தாண்டு வருகை தந்திருக்கும் மூவர்ண ஆடைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.