நாகை மாவட்டம் பிரதாப ராமபுரத்தில் சவுடு மண்ணை அள்ள வந்த வாகனங்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மண் அள்ளி செல்வதற்காக ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள் உள்ளிட்டவை சின்னேரிக்கு வந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள், மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களைச் சிறைபிடித்தனர். தங்களிடம் கருத்துக் கேட்காமலேயே மண் குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மக்கள், சம்பவ இடத்துக்கு வந்த அரசு அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.